கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையை வசந்தமாக்கும் அன்றாட பழக்கங்கள்..*
*கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையை வசந்தமாக்கும் அன்றாட பழக்கங்கள்..*
*முன்னுரை:-* வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும் வசந்தமாக்குவதற்கும் அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்..
*1. புன்னகை:-*
இறுக்கமான மன நிலையில் இருப்பது மனரீதியாக மேலும் பலவீனப்படுத்திவிடும். புன்னகையை வெளிப்படுத்தும் சுபாவம் கொண்டவராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சியுங்கள். நண்பர்கள், உறவினர்களைப் பார்க்கும்போது, பேசும்போது புன்னகை செய்யுங்கள். தினமும் குறைந்தபட்சம் 3 பேரையாவது சிரிக்க வைக்க முயற்சியுங்கள். அது முடியாவிட்டால் 3 பேரைப் பார்த்தாவது புன்னகைக்கப் பழகிக்கொள்ளுங்கள். அது மனதை இலகுவாக்கும்.
-> _"கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; மறுபடியும் சொல்லுகிறேன், சந்தோஷமாயிருங்கள்."_
(பிலிப்பியர் 4 : 4)
*2. தனிப்பட்ட ஜெபம் / தியானம்:-*
தினமும் குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது ஜெபம் அல்லது தியானம் பண்ணுங்கள். இதற்காக எந்த வேலையிலும் ஈடுபடாமல், எது பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருங்கள். அந்த சமயத்தில் மனதில் ஏதேனும் நினைகளோ, வேறு எது பற்றிய யோசனையோ கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும்..
-> _"நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்."_
(மத்தேயு 6 : 6)
*3. குடும்ப ஜெபம்:-*
குடும்பமே ஒரு சிறிய சபை என்பார்கள். கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜெபிப்பது குடும்ப ஐக்கியத்தை வலுப்படுத்தும்..
-> _"இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்."_
(மத்தேயு 18 : 20)
*4. வேதாகம வாசிப்பு:-*
வேதத்தை வாசிப்பது அல்லது தியானிப்பது என்பது தேவனுடன் உரையாடுவது போலாகும். தினமும் தனிப்பட்ட முறையிலும், முடிந்தால் குடும்பமாகச் சேர்ந்தும் வேதாகமத்தின் ஒரு பகுதியையாவது வாசித்துப் பின்பற்ற வேண்டும்.
-> _"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."_
(சங்கீதம் 119 : 105)
*5. அன்பை வெளிப்படுத்துதல் (செயல்கள் மூலம்):-*
அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, அது செயலாகும். ஒருவர் மற்றவர்மீது வைத்திருக்கும் அன்பை வெறும் வார்த்தைகளால் அல்லாமல், சிறிய அன்றாடச் செயல்கள் மூலம் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம்..
-> _"பிள்ளைகளே, நம்முடைய அன்பு வெறும் வார்த்தையாகவோ, பேச்சாகவோ இருக்கக்கூடாது; அது உண்மையானதாகவும், செயலில் காட்டுவதாகவும் இருக்க வேண்டும்."_
(1யோவான் 3 : 18)
*6. திட்டமிடல்:-*
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஊடுருவதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததே காரணமாகும். காலையில் எழுந்ததும் இன்றைய நாளில் உங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டுத் திட்டமிடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப அந்தச் செயலில் ஈடுபட்டாலே அதற்கே நேரம் சரியாக இருக்கும். அடுத்தடுத்த வேலையை நோக்கி நகர வைத்துவிடும். தேவையற்ற சிந்தனை, எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்..
-> _"மனுஷனுடைய இருதயத்தில் அநேக யோசனைகள் உண்டு; ஆனாலும் கர்த்தருடைய ஆலோசனையே நிலைநிற்கும்."_
(நீதிமொழிகள் 19 : 21)
*7. குடும்பத்திற்கு முக்கியத்துவம்:-*
வேலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்குக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலம் பாதிப்புக்குள்ளானால் வேலை உங்களை விலக்கி வைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்..
-> _"கணவன்மார்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, அதைத் தமக்கென்று பரிசுத்தமாக்கினதுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளில் அன்புகூரவேண்டும்."_
(எபேசியர் 5 : 25)
*8. ஒதுங்குதல்:-*
யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க முயற்சியுங்கள். அதனை காதுகொடுத்துக் கேட்காத பட்சத்தில் ஒதுங்கிவிடுங்கள். வாக்குவாதம் செய்பவர் உங்கள் மனம் நோகும்படி வார்த்தைகளைப் பேசிவிட்டாலும், நீங்கள் தரம் தாழ்ந்து பேசிவிடாதீர்கள். தேவையற்ற விவாதமாக இருந்தால் ஒதுங்கி விடுவதே நல்லது..
-> _"உங்களால் கூடுமானால், எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்."_
(ரோமர் 12 : 18)
*9. நேர்மறை:-*
கடந்த காலப் பிரச்சினைகள், எதிர்மறை எண்ணங்கள் தான் பெரும்பாலானவர்களின் மனநிம்மதியைக் குலைக்கும். அது பற்றிய சிந்தனையில் மூழ்கவைத்து நேரத்தை வீணடிக்கும். வாழ்க்கை மீது வெறுப்புணர்வை உண்டாக்கும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள், அத்தகைய எண்ணங்கள் தலைதூக்கும்போது கவனத்தைத் திசைதிருப்பும் செயலில் ஈடுபடுங்கள். நேர்மறையான விஷயங்களில் மனதைப் பதிய விடுங்கள்..
-> _"பூரணசமாதானமுள்ள மனதை உடையவன் உம்மைத் திடமனதாய் நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைத் திடப்படுத்துவீர்."_
(ஏசாயா 26 : 3)
*10. மன்னிப்பு:-*
வாழ்க்கை மிகவும் குறுகியது, நிச்சயமில்லாதது. வாழும்வரை ஆனந்தமாக, வாழ்க்கையை ரசித்து வாழப் பழகுங்கள். யார் மீதும் வெறுப்புக் காட்டாதீர்கள். உறவோ, நட்போ பகைமை கொள்ளாதீர்கள். அவர்களைப் பற்றிய எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து நிம்மதியைக் குலைக்க இடமழிக்காதீர்கள். யாரையும் விரோதியாகப் பார்க்காதீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் தவறு செய்திருந்தாலும் சில காலம் கழித்தாவது மன்னிக்கப் பழகுங்கள். மன்னிப்பு அவர்களைப்பற்றிய மனதில் பதிந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்துவிடும். அவர்களைப்பற்றிய எண்ண ஓட்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்த உதவிடும்..
-> _"ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டாயிருந்தால், ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்ளுங்கள்; கிறிஸ்து உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் செய்யுங்கள்."_
(கொலோசெயர் 3 : 13)
*11. உதவி:-*
நண்பரோ, உறவினரோ, முன்பின் அறியாதவரோ யாராக இருந்தாலும் தக்க சமயத்தில் அவர்கள் எதிர்பார்க்காமலே உதவி செய்ய முன் வாருங்கள். உதவி கேட்கத் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தால் உடனே உதவிடுங்கள். அவர்களாகக் கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவராக, கொடுத்து மகிழும் சுபாவம் கொண்டவர்களாக இருங்கள். பிறரிடம் இருந்து வாங்குபவர்களாக இருக்காதீர்கள்..
-> _"வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்."_
(அப்போஸ்தலர் 20 : 35)
*12. பொறாமை:-*
மற்றவர்கள்மீது ஒருபோதும் பொறாமை கொள்ளாதீர்கள். அவர்கள் பற்றிய சிந்தனையை மனதுக்குள் புகுத்தி உங்கள் நேரத்தை வீணடித்துவிடும். அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதாலோ, பேசிக்கொண்டிருப்பதாலோ உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்..
-> _"அன்பு பொறாமைப்படாது."_
(1 கொரிந்தியர் 13 : 4)
*13. விருப்பம்:-*
ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான செயலாக இருந்தால் தாராளமாகச் செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது. அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்..
-> _"நீங்கள் உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."_
(ரோமர் 12 : 2)
*14. மகிழ்ச்சி:-*
வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தாலும் அதனைக் கொண்டாடுங்கள். அது தரும் இன்பத்தை உங்களால் மட்டுமே உணர முடியும். அதனைச் சாதாரணமாகக் கடந்து சென்று விடாதீர்கள். அதனை மீண்டும் அனுபவிக்க முடியாது..
-> _"இதோ, தங்கள் சந்தோஷத்தோடே கூடத் தங்கள் வழியிலே போகிறார்கள்."_
(யோபு 34 : 28)
*15. மனப்பக்குவம்:-*
எந்த விஷயத்திற்கும் சட்டென்று டென்ஷன் ஆகாதீர்கள். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் ஏற்றீக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதுவும் அப்படியே இருக்காது. நிலைமை மாறும். அது நிகழ்காலத்தை பாழாக்கிவிடும்..
-> _"உமது அக்கிரமத்தினிமித்தம் நீர் முறுமுறுப்பானேன் என்று சொல்லும்படி, பிழைத்திருக்கிறவன் எவனும் முறுமுறுப்பானேன்?"_
(புலம்பல் 3 : 39)
*16. வாழ்க்கை ஒப்பீடு:-*
உங்களுடைய வாழ்க்கை முறையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவரை போலவே தாமும் வாழ வேண்டும் என்று எண்ணாதீர்கள். சந்தோஷமாக வாழ்வதாக வெளிக்காட்டிக் கொள்ளும் அவரிடத்திலும் சொல்லொண்ணா துயரம் குடிகொண்டிருக்கலாம். அதுபோல் மற்றவரின் தனிப்பட்ட, அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டாதீர்கள்..
-> _"ஒவ்வொருவனும் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும் போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்."_
(கலாத்தியர் 6 : 4)
*முடிவுரை:-*
அன்றாட வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்கும் இந்த 16 எளிய பழக்கவழக்கங்கள் வெறும் சடங்குகள் அல்ல, மாறாக இவை குடும்ப வாழ்வை தேவ வார்த்தையின் அடிப்படையில் கட்டமைக்கும் அடித்தளங்களாகும். விசுவாசத்தின் பயணத்தில், சவால்கள் வரும்போது புன்னகை, ஜெபம், மன்னிப்பு, மற்றும் நேர்மறை எண்ணங்கள் ஆகிய இந்தத் தூண்கள் உங்கள் குடும்பத்தை அசைக்க முடியாத ஒரு மலையைப் போல உறுதிப்படுத்தும்..
=> கிறிஸ்துவே உங்கள் இல்லத்தின் தலைவராக இருக்கும்போது, அன்பு என்னும் பிணைப்பினால் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். இந்த அன்றாடப் பழக்கவழக்கங்கள் மூலம், உங்கள் குடும்ப வாழ்க்கை வெறுமனே சுழற்சியாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் புதிய கிருபையாலும், நிம்மதியாலும், அணையாத மகிழ்ச்சியாலும் நிரம்பி வழியும். உங்கள் இல்லம் இம்மையிலேயே பரலோகத்தின் ஒரு சிறு நிழலாக, பிறருக்கு ஒளியூட்டும் சாட்சியாக மாறட்டும்..
கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவராக.. 😊
Comments
Post a Comment