தலைமைத்துவத்தின் ஆவிக்குரிய பொறுப்புகள்... லேவி 9
லேவியராகமம் 9ம் அதிகாரம் வாசியுங்கள்..
தலைமைத்துவத்தின் உள்ளங்கை அப்பம்..
ஆரோன் மகா பரிசுத்த. ஆசாரியனுக்கு ஒப்புமையாய் இருக்கிறான்.
ஆரோனுடைய உள்ளங்கைகளை குறித்து நாம் சிந்தித்தோம்.
ஆரோனின் உள்ளங்கையில் எண்ணெயிடப்பட்ட அப்பம் ஆகிய அதிரசத்தை குறித்து வாசிக்கிறோம்.
இந்த அப்பம் மூன்று விதமான கிறிஸ்துவின் தன்மைகளை காட்டுகிறது.
ஒன்று பாவமில்லா கிறிஸ்து.
இரண்டு அபிஷேகப்படுத்தப்பட்ட கிறிஸ்து
மூன்று பரிசுத்த ஆவியால் வெளிப்பட்ட கிறிஸ்து.
தலைமத்துவத்திற்கு 2 பலிகள்.. ஜனங்களுக்கு 4 பலிகள்..
இன்றைக்கு லேவி 9 ம் அதிகாரத்தில் சில சத்தியங்களை நாம் கற்றுக் கொள்வோம். லேவியர் ஆகமம் ஒன்பதாம் அதிகாரம் எட்டாம் நாளிலே என்று ஆரம்பமாகிறது. கடந்த அதிகாரத்திலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் சபையாரையும் தன் பக்கமாக வரும்படி அழைப்பதை பார்த்தோம். இந்த அதிகாரத்திலே சபையார் அழைக்கப்படவில்லை.
ஆனால் ஆரோன் அவனுடைய குமாரர்கள் சபையின் பிரதிநிதிகளான இஸ்ரவேல் மூப்பர்கள் அழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் அனைவரின் முன்னிலையில் மோசே ஆரோனுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறார்,
நீ உனக்காக பாவ நிவாரண பலி தகன பலி என்ற இரண்டு பலிகளை செலுத்து என்று கூறுகிறார்.
ஆரோன் முதலாவதாக. தன்னை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.
தனக்காக பலி செலுத்துவது மட்டுமல்லாமல் ஆரோன் பிறருக்காகவும் பலி செலுத்த வேண்டியது இருந்தது.
எனவே மோசே ஆரோனிடம் உனக்காக இரண்டு பலி செலுத்துகிறாய். மற்றவர்களுக்காக நான்கு பலிகள் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
ஆரோன் தனக்காக பாவ நிவாரண பலி தகன பலி செலுத்துகிறான் .
பின்பு ஜனங்களுக்காக பாவ நிவாரண பலி, தகன பலி, சமாதானபலி, போஜன பலி என்ற 4 பலிகளையும் செலுத்துகிறான் .
அனைத்து பலிகளுக்கும் உரிய அனைத்து ஆயத்தங்களுடன் அனைவரும் ஆண்டவரின் சன்னதியில் கூடி நின்றனர்.
பாவ நிவிர்த்தி அதன் மூலம் செய்யப்பட்டு அவர்கள் தேவனோடு கூட ஒப்புராவகும் அனுபவத்தை பெறுகிறார்கள்.
மேலும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய கிருபை அவர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது கர்த்தருடைய மகிமை இன்னும் ஒருமுறை கூட அவர்களுக்கு தெரியப்பட இருக்கின்றது.
1. பாவ நிவாரண பலி பாவமன்னிப்பை காட்டுகின்றது.
2. தகன பலி முற்றும் தன்னை ஒப்புக்கொடுப்பதை காட்டுகின்றது.
3. போஜன பலி கர்த்தரின் சேவைக்கு ஆயத்தம் என்பதை காட்டுகிறது.
4. சமாதான பலி கர்த்தருடன் ஐக்கியம் மற்றவருடன் ஐக்கியம் என்பதை காட்டுகிறது.
சகல காரியங்களையும் செம்மையாய் செய்யும்படி தேவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் போது , அப்பிரயோஜனமான ஒரு ஊழியனையும் தேவன் ஆசீர்வாதத்தின் வடிகாலாக மாற்றுவார்.
இது நாம் ஆபிரகாமின் வாழ்க்கையில் கண்ட உண்மை.
இது நாம் ஆரோனின் ஊழியத்திலும் காணப்போகும் உண்மையாகும்..
மோசே ஆரோன் தனித்தனி பொறுப்புகள்..
லேவியராகமம் 9. 22 முதல் 24 வசனங்களில் ஆரோன் மோசே ஆசீர்வதிப்பதையும் ஆண்டவர் இதனை அக்கினியின் மூலம் ஆமோதிப்பதையும் காணலாம்.
மீட்கப்பட்ட மக்களின் சுதந்திர வரலாறு யாத்திராகமம் 12-ம் அதிகாரத்தில் ஆரம்பமாகி லேவியராகமம் எட்டாம் அதிகாரம் வரை மோசே ஒருவரே தலைவனாகவும் ஆசாரியனாகவும் இருந்து வந்தான் என்று பார்க்கிறோம்.
ஆனால் லேவியர் ஆகமம் ஒன்பதாம் அதிகாரம் முதல் மோசேயின் பொறுப்புகள் ஆரோனோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மோசே நிர்வாக பொறுப்புகளையும் ஆரோன் ஆவிக்குரிய பொறுப்புகளையும் எடுத்து நடத்த துவங்குகிறார்கள் .
சபையின் நிர்வாக பொறுப்புகளையும் ஆவிக்குரிய பொறுப்புகளையும் ஒரே ஒரு தனி மனிதன் எடுத்து நடத்துவது வேதத்தின் படி சரியானது அல்ல.
புதிய ஏற்பாட்டில் ஆதி திருச்சபையில் ஆவிக்குரிய ஊழியம் தனித்தே நின்றது.
சகோதரரே பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள் அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம் நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தை போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்று அப்போஸ்தலர் தீர்மானம் எடுத்தனர்.
ஆசரிப்பு கூடாரத்தினை நோக்கி மக்கள் வருகின்றார்கள் என்றால் அவ்வாறு வருவதற்கு மூன்று காரணங்கள் உண்டு 1. முதலாவது எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்
2. இரண்டாவது தேவனுடைய ஆசீர்வாதம் எங்கள் குடும்பங்களில் தங்க வேண்டும் 3. மூன்றாவது எங்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் இனிதாக இருக்க வேண்டும். மக்களின் இந்த மூன்று வாஞ்சை களையும் நிறைவேறும்படியாக ஆரோனின் ஆசிர்வாதம் அமைந்திருக்கிறது .
இந்த மூன்றையும் பெற்றுச்செல்லுங்கள் என்பதே ஆரோன் அருளும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
பாவமன்னிப்பாகிய ஆசீர்வாதம் அனைத்திலும் பிரகாசம் என்ற கிருபை சமாதானமான ஆவிக்குரிய ஜீவியம். சபையின் பக்தி விருத்திக்கு ஏதுவாக ஆண்டவருடைய ஊழியத்தை செய்யும் தேவனுடைய பிள்ளைகளுக்கு வேதம் கூறுகிறது 1 கொரிந்தியர் 14. 3
தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனும் மனுஷருக்கு பக்தி விருத்தியும் புத்தியும் ஆறுதலும் உண்டாக்கத்தக்கதாக பேசுகிறான்.
இந்த மூன்று ஆசிர்வாதங்களும் ஓர் அர்த்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
மனிதன் கொடுக்கும் ஆசிர்வாதமாக அல்ல சர்வ வல்லவர் கொடுக்கும் ஆசிர்வாதமாக இருக்கிறது என்பதை ஆரோனின் உயர்த்தப்பட்ட கரங்கள் அனைவருக்கும் தெரிவித்தது.
1 தீமோ 2. 8 ம் வசனத்தில் பொறுப்புள்ள சபை தலைமைத்துவத்தை குறித்து வாசிக்கிறோம் .
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 2:8
source @ nej
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628003
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment